
சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொரளை பொலிஸாரால் வரையப்பட்ட ஓவியத்துடன், ஒப்பிட்டு வேறு ஒரு நபர் தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர் தெரணியகல பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த டிசம்பர் 30ஆம் திகதி இரவு கொஹூவல, போதியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், பொலிஸ் ஓவியக் கலைஞர்களினால் வரையப்பட்ட சந்தேக நபரின் மாதிரி படம் ஒன்றையும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த சூழலில், தெரணியகல பகுதியில் சிறிய உணவகம் நடத்தும் லஹிரு மதுசங்க என்பவர், தனது வியாபாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த ஜனவரி முதலாம் திகதி கொழும்புக்கு வந்திருந்தார்.
அன்று இரவு பேஸ்லைன் வீதியிலுள்ள தமது மனைவியின் வீட்டில் தங்கியிருந்தபோது, அடுத்த நாள் காலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த வீட்டிற்கு பிரவேசித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தனது விருப்பத்தின் பேரில் வாக்குமூலம் அளிப்பதற்காக பொரளை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, சந்தேக நபரின் வரைபடத்தைக் காட்டி பொலிஸார் தன்னைத் தாக்கியதாக அந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுமார் 2 நாட்கள் பொரளை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லஹிரு, கடந்த 3ஆம் திகதி பிற்பகலே விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை , அந்த இளைஞரைத் தாக்கியதாக பொலிஸார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிராகரித்துள்லார்





