
இளம் வயதில் காதலித்த பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்த நபர், குறும்படம் பார்த்த பின்னர் அந்த பெண்ணை தனது 65 வயதில் திருமணம் செய்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் முண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். தற்போது 65 வயதான இவர், தன்னுடைய இளம் வயதில், ராஷ்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் பயத்தின் காரணமாக இருவரும் தன்னுடைய காதலை வெளிப்படுத்தாமல் இருந்த நிலையில், ராஷ்மியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
அதன் பின்னர் வேலைக்காக வெளிநாடு சென்ற ஜெய பிரகாஷும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்ட இருவரும், குழந்தைகள் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக திருமண வாழ்வை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் ராஷ்மியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதே போல், ஜெயபிரகாஷின் மனைவியும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார்.
கணவரை இழந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக, ரஷ்மி குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தனது மகள்களின் வற்புறுத்தலின் பேரில் மறுமணம் செய்ய ஒப்புக்கொண்ட ஜெயபிரகாஷ், அதற்காக பெண் பார்த்து வந்துள்ளார்.
இதற்கிடையே அவர், ராஷ்மி நடித்த குறும்படம் ஒன்றை பார்த்துள்ளார். தனது முன்னாள் காதலி குறும்படத்தில் நடிப்பதை பார்த்து உற்சாகமடைந்த ஜெயபிரகாஷ் உடனடியாக குறும்பட இயக்குநரிடம் ராஷ்மியுடைய மகளின் செல்போன் எண்ணை வாங்கி ராஷ்மி உடன் பேசியுள்ளார்.
இருவரும் தங்களது துணையை இழந்த விவரங்களை அறிந்த பின்னர், தான் மறுமணத்திற்கு பெண் தேடி வருவதாக ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.
இது குறித்து, ரஷ்மி தனது மகள் மற்றும் மருமகனிடம் ஆலோசனை நடத்திய நிலையில், அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, ஜெயபிரகாஷ் மற்றும் ராஷ்மியின் குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பங்குபெற்ற அவர்களின் திருமணம், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் எளிய முறையில் நடைபெற்றது.
ஜெயபிரகாஷ் மற்றும் ரஷ்மியின் திருமணப் படத்தை, சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த ராஷ்மியின் மகள், “எந்தக் குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும்?” என பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.





