வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் : சில பகுதிகளில் நாளை முதல் தீவிரமடையும் மழை!!

313

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே நிலை கொண்டிருந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

அவர் இன்று 07.01.2026 புதன்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார். இது நாளை இரவு (08.01.2026) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புயலாக மாறுமா என்பது தொடர்பாக நாளை இரவே(08.01.2026) தீர்மானிக்க முடியும்.

ஒரு புயலின் படிநிலை வளர்ச்சியில்,

1. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

2. காற்றுச் சுழற்சி

3. காற்றழுத்த தாழ்வு நிலை

4. நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

5. தாழ்வு மண்டலம்

6. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

7. புயல்

8. சூறாவளி

9. சூப்பர் சூறாவளி என அமையும்.

நாளை முதல் தீவிரம்

தற்போது தெற்கு, மத்திய, ஊவா, கிழக்கு, வட மத்திய, வடக்கு ( ஒரு சில பகுதிகளில்) மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை நாளை முதல் தீவிரமடையும்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை முதல் மழை பரவலடைவதோடு செறிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தாழமுக்கம் தொடர்ச்சியாக வலுவடைகிறது. ஆகவே வானிலை நிலைமைகளின் குழப்பநிலையும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே மக்கள் எச்சரிக்கை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, போதுமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வது அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.