வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தயார் நிலையில் அதிகாரிகள்!!

292

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக, 8 ஆம் திகதி முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் நிலை அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்தி, அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளமை கறிப்பிடத்தக்கது.