
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த 32 வயது இந்தியப் பெண் நிகிதா கோடீஷலா, தனது முன்னாள் அறை நண்பரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக மாயமான நிலையில் இருந்த நிகிதாவின் உடல்,
அவர் தங்கியிருந்த வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் டிக்கிக்குள் இருந்து மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அர்ஜுன் சர்மா என்ற 32 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நிகிதா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்.
நிகிதா மற்றும் அர்ஜுன் சர்மா இருவரும் முன்பு ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், அந்த காலத்தில் அர்ஜுன் நிகிதாவிடமிருந்து சுமார் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களைக் கடனாக பெற்றிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டு நிகிதா தொடர்ந்து வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரமே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று நிகிதாவின் தந்தை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
கொலை செய்த பிறகு, அர்ஜுன் சர்மா தற்கொலை செய்துகொள்ளப் போவதாக நிகிதாவின் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்த தகவலைப் பெற்ற குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தற்போது நிகிதாவின் உடல் அமெரிக்காவில் உள்ள நிலையில், அதை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு மற்றும் வெளியுறவுத் துறை உதவ வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





