
வவுனியாவில் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளை மறித்து திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் 10க்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியா மாவட்ட மோட்டார் திணைக்கள பிரதான பரிட்சையாளர் ஏ.எம்.வி.கே அதிகாரி தலைமையில் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய மற்றும் மாவட்ட பிரிவு போக்குவரத்து பொலிஸாரினால் இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயற்பாடானது வவுனியா நெளுக்குளம் பகுதியில் சதொச சந்தியில் இன்று காலை 10.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அரச மற்றும் தனியார் பேருந்துகள், அதிவேக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அவற்றில் மேலதிக பாகங்கள் பொருத்தியமை, வழுக்கையான ரயர்கள், லைட் மற்றும் வைசர் வேலை செய்யாமை, அதிக ஒலி எழுப்பும் கோன், விபத்தினை ஏற்படுத்தும் வகையிலான பாகங்கள் பொருத்தியமை,

போன்ற பல்வேறு குற்றங்களுக்காக முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் சாரதி, பேருந்து சாரதிகள் என 10க்கு மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டன.







