உயிரைத் தவிர இழந்த ஏனைய அனைத்தையும் வழங்குவோம் : ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!!

263

அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.

அதற்கான வலுவான திட்டம் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்றும், அந்த மக்களை 2048 ஆம் ஆண்டு வரை காத்திருக்கச் சொல்லப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் முழுமையாக வீடுகளை இழந்த குருநாகல் மாவட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பேரழிவிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்தாலும், தற்போது கணிசமான அளவுக்கு நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் மீட்டெடுக்க அரசுக்கு முடிந்துள்ளது.

மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு அனர்த்தத்தையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் இந்த நாட்டுப் பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.