
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியில் 85வது மைல்கல் தூணுக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளுடனும் அதே திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடனும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலும் குறித்த பஸ் அதன் முன்னால் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, லொறியின் சாரதி மற்றும் இரண்டு பயணிகள், இரண்டு பஸ்களிலும் பயணித்த 05 பயணிகள் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையிலும், மேலும் இரண்டு பயணிகள் மாவனெல்லை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, லொறியில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





