
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 300 புத்தம் புதிய வாகனங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்துறை குறித்த வாகனங்களை விடுவிப்பதற்காக அவற்றின் அசல் மதிப்பை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வரிகளை கோருவதாக தனிப்பட்ட வாகன இறக்குமதியாளர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்த விடயத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து இறக்குமதி விதிமுறைகளையும் கடைப்பிடித்ததாக தனிப்பட்ட வாகன உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் பின்னர் சுங்கத்துறை கூடுதல் வரிகளை விதித்துள்ளது, இதில் பொருந்தக்கூடிய சுங்க வரியில் கிட்டத்தட்ட 50 சதவீத கூடுதல் வரியாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பல சந்தர்ப்பங்களில், இறக்குமதியாளர்கள் ஒரு வாகனத்திற்கு மொத்த வரித் தொகை 10 மில்லியனைத் தாண்டியுள்ளதாகக் கூறுகின்றனர். நீடித்த தாமதம் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களிடையே விரக்தியையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே திருத்தப்பட்ட வரி கோரிக்கைகள் நியாயமற்றவை என்றும், பல மாதங்களாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்ட போதிலும் தங்கள் வாகனங்களை துறைமுகத்திலேயே சிக்க வைத்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வாகனங்கள் கிராஸ் போர்டர் லெட்டர் ஒஃப் கிரெடிட் (எல்சி) முறையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில்,நேற்று (13.01.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாதிக்கப்பட்ட இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலையிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
தங்கள் வாகனங்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் நிதி ரீதியாகவும் உள ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் பல உரிமையாளர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் தங்கள் குடும்பத்திற்காக ஒரு வாகனத்தை வாங்க பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.
அவர்களின் வாகனங்கள் ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பப்பட்ட பிறகு விதிகள் மாற்றப்பட்டதால் இப்போது பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





