முல்லைத்தீவில் பெரும் சோகம் : 19 வயது இளைஞன் யானை தாக்கி உயிரிழப்பு!!

138

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேறாங்கண்டல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பொன்முடி சுயந்தன் என்பவராவார்.

வழமை போல விவசாய நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பல விதமான கஷ்டங்களும், இயற்கை அனர்த்தங்களும் சூழ்ந்த நிலையில் விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்களிடையே, இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை காட்டு யானை அச்சுறுத்தலால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டுமென பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.