ஆதாரமற்ற குற்றச்சாட்டு : பேருந்தில் பெண் எடுத்த வீடியோவால் பறிபோன உயிர்!!

12

கேரளாவில் பேருந்து பயணத்தின்போது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், 42 வயது மதிக்கத்தக்க நபர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்ற நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஜவுளி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த தீபக், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கண்ணூர் நோக்கிப் பேருந்தில் பயணித்தபோது, அங்கு இருந்த ஒரு பெண் தீபக் தன் மீது தவறான முறையில் கை வைத்ததாகக் கூறி காணொளி ஒன்றை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

ஆலோசகர் மற்றும் விரிவுரையாளராகப் பணியாற்றும் அந்தப் பெண், இது ஒரு விபத்து அல்ல என்றும் “பாலியல் எல்லை மீறல்” என்றும் அக்காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.

சமூக வலைதளங்களில் அந்தப் பெண்ணின் காணொளி காட்டுத்தீயாகப் பரவியது. இருப்பினும், அக்காணொளியைப் பார்த்த பலரும், பேருந்தில் இருந்த கூட்ட நெரிசல் காரணமாகவே தீபக்கின் முழங்கை எதிர்பாராமல் அந்தப் பெண்ணின் மீது பட்டிருக்கலாம் என்றும், அவர் மீது தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கருத்துத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் , சமூக வலைதளங்களில் ஏற்பட்ட கடும் விமர்சனங்களாலும், பொதுவெளியில் ஏற்பட்ட அவமானத்தாலும் தீபக் கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்த மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தீபக்கின் மரணம் தற்போது கேரளாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஆண்களின் உரிமைகளுக்காக” குரல் கொடுக்கும் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் அந்தப் பெண்ணுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

வெறும் விளம்பரத்திற்காகவும் சமூக வலைதள உள்ளடக்கத்திற்காகவும் (Content) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஒரு உயிரைப் பறித்துவிட்டதாக அந்தப் பெண் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இச்சம்பவம் குறித்து “இயற்கைக்கு மாறான மரணம்” என வழக்குப் பதிவு செய்துள்ள கோழிக்கோடு பொலிஸார், வைரலான காணொளி மற்றும் தற்கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.