தோல்விக்கு நானே பொறுப்பு : டோனி அறிவிப்பு!!

247

Dhoniஇங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் நடந்த ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 6 பந்துகளில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. களத்தில் தலைவர் டோனி, அம்பத்தி ராயுடு ஆகியோர் இருந்தனர். கடைசி ஓவரில் அனைத்து பந்துகளையும் எதிர்கொண்ட டோனி முதல் பந்தில் ஆறு ஓட்டங்கள் அடித்தார்.

2வது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். 3வது பந்தில் ஓட்டங்கள் பெறவில்லை. 4வது பந்தில் பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் ஓட்டங்கள் எடுக்கவில்லை. 6வது பந்தில் ஒரு ஓட்டங்கள் வந்தது. 3வது மற்றும் 5வது பந்தில் ஒரு ஓட்டங்கள் எடுக்க வாய்ப்பு இருந்தும் டோனி ஓடவில்லை. இதனால் தோல்விக்கு டோனியின் தவறான ஆட்ட வியூகமே காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணி தலைவர் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது,

6 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுப்பது என்பது எப்பொழுதும் கடினமான காரியமாகும். முதல் பந்தில் சிக்சர் அடித்தேன். 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினேன். இருப்பினும் கடைசி 2 பந்தை எதிர்கொள்கையில் நெருக்கடி இருந்தது.

நான் அடித்து ஆட முயற்சித்தேன். ஆனால் பந்து சரியான இடத்தில் சிக்கவில்லை. பந்து கால் விரலில் உரசியபடி துடுப்பில் பட்டதால் அதிரடியாக அடித்து விளையாட முடியவில்லை.

அம்பத்தி ராயுடு அடித்து ஆடக்கூடிய திறமை கொண்ட வீரர் தான். இருப்பினும் அவர் அப்போது தான் களம் கண்டு இருந்தார். இதனால் அதிக பந்துகளை எதிர்கொள்ளாத அவர் வந்த உடனே அடித்து ஆடுவது கடினம் என்று கருதி கடைசி ஓவரில் எல்லா பந்துகளையும் நானே எதிர்கொண்டு அணியை வெற்றிக்கு அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்து ஆடினேன்.

ஆனால் நான் நினைத்தபடி நடக்கவில்லை. எனவே இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களது யோர்க்கர் பந்துவீச்சு கவலை அளிப்பதாக இருந்தது. இவ்வாறு டோனி கூறினார்.