தங்கத்தை வாங்கி குவிக்கும் வங்கிகள்: விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்திற்கான காரணம்!!

343

தங்கத்தின் விலை எதிர்வரும் நாட்களில் மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டொலர்களை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.

உலோகங்களின் வர்த்தக வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படும் நிலையில்,தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் அவுன்ஸ் ஒன்றுக்கு 105 டொலராக உயர்ந்துள்ளது.

உலகளவில் காணப்படும் நிச்சயமற்ற சூழலால் முதலீட்டாளர்கள் ஏனைய முதலீடுகளை விட தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்ற நிலையில் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் அதிரடி வர்த்தகக் கொள்கைகள் சந்தையை நிலைகுலையச் செய்துள்ளதுடன்,முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது.

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் நிதிச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளன.

உயர்ந்து வரும் பண வீக்கம், அமெரிக்க டொலர் மதிப்பு வீழ்ச்சி, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பது மற்றும் வட்டி விகித எதிர்பார்ப்பு ஆகியவையும் தங்கம், வெள்ளி விலையேற்றத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

மேலும் தங்கத்தின் விலை எதிர்வரும் நாட்களில் மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம், 2026-ம் ஆண்டின் இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,400 டொலர்களைத் தாண்டும் என கணித்துள்ளது.

2026-ல் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 6,000 டொலர்களை தாண்ட வாய்ப்புள்ளதாக பேங்க் ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜே.பி.மார்கன் நிறுவனமும் தங்கம் 6,000 டொலர்களைத் தொடும் எனவும் தெரிவித்துள்ளது.