
நாட்டில் தற்போது தங்க நகைகளை கொள்ளையிடும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளுக்கு நாள் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஹட்டன் பகுதியில் நகை வாங்குவது போல பாவனை செய்த நபரொருவர் நகைக் கடைக்குள் வைத்தே தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்றிருந்தார்.
இந்த நிலையில், இரு தினங்களுக்குள் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இருந்து தங்க நகைகள் பறித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மோதரையில் இருந்து புறக்கோட்டைக்கும், பின்னர் வெள்ளவத்தை கடற்கரைக்கும் முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த குழுவினர் முச்சக்கரவண்டி சாரதியிடம் இருந்து தங்க நகைகளைப் பறித்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
மிக நீண்ட சவாரியை மேற்கொண்டதன் காரணமாக, சாரதிக்கு குடிப்பதற்கு பால் பக்கற்றொன்றினை பயணம் செய்தவர்கள் கொடுத்ததாகவும் இதன் பின்னர் சாரதியிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
கடந்த நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பது அவசியமாகின்றது.
பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் போதும், போக்குவரத்தின் போதும் அல்லது வீடுகளில் தனிமையில் இருக்கும் போதும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களால் உயிருக்கும் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கையோடு செயற்பாடுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.





