மோமோஸ் வாங்க 85 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொடுத்த சிறுவன் : பெற்றோர் அதிர்ச்சி!!

36

இலவசமாக மோமோஸ் தருவதாக கூறி சிறுவனிடம் ரூ.85 லட்ச தங்க நகைகளை கடை உரிமையாளர்கள் சுருட்டியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா நகரத்தை சேர்ந்த விம்லேஷ் மிஸ்ரா, வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு 7வது படிக்கும் மகன் ஒருவர் உள்ளார். அந்த மகனுக்கு மோமோஸ் உணவு என்றால் மிகவும் விருப்பம். பணம் கிடைக்கும் போதெல்லாம் அதனை வைத்து அருகே உள்ள கடையில் மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இதனை கவனித்த அந்த கடையின் உரிமையாளர்கள் இலவசமாக மோமோஸ் வேண்டுமென்றால், தங்கள் கேட்கும் பொருட்களை வீட்டில் இருந்து எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.

அதனை சிறுவன் செய்ததும், வீட்டில் உள்ள தங்க நகைகளை எடுத்து வந்தால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக மோமோஸ் தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுவன், வீட்டில் உள்ள தங்க நகைகளை எடுத்து வந்த கடை உரிமையாளர்களிடம் வழங்கி மோமோஸ் பெற்றுள்ளான்.

அதன் பின்னர், விம்லேஷ் மிஸ்ராவின் சகோதரி தனது நகைகளை பெற்றுக்கொள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அலமாரியை திறந்து பார்த்த போது நகைகள் இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகியுள்ளது.

இது குறித்து விம்லேஷ் மிஸ்ரா ராம்பூர் கர்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்திய போது, மோமோஸ் வாங்குவதற்காக நகைகளை கொடுத்ததை சிறுவன் தெரிவித்துள்ளான்.

உடனடியாக அந்த கடைக்கு சென்ற போது, கடை மூடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மோமோஸ் கடை உரிமையாளர்கள் மூவரை தேடி வருகின்றனர்.