
இந்தியாவின் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்திற்குள்ளதகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் அறிக்கைகளை வெளியிட்டு உறுதி செய்துள்ளன.
இச்சம்பவத்தின்போது கோவைக்குப் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானமும் ஹைதராபாத்தில் இருந்து வந்து தரையிறங்கிய இண்டிகோ விமானமும் ஒன்றோடு ஒன்று உரசிக்கெண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக, அது நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது, ஏற்கெனவே அதே ஓடுபாதையில் மெதுவாக வந்து கொண்டிருந்த விமானத்தின் இறக்கைகள் மீது லேசாக உரசியுள்ளது.
இரண்டு விமானங்களும் மிகக் குறைந்த வேகத்தில் பயணித்ததால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இரண்டு விமானங்களிலும் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமான நிறுவனங்கள் விமானங்களை இரத்து செய்து பயணிகளுக்கு மாற்று தங்குமிடங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை சேதமடைந்துள்ளது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.





