கணவனைக் காப்பாற்ற ஓடும் ரயிலில் இருந்து குதித்த மனைவி பரிதாபமாக உயிரிழப்பு!!

420

ஓடும் ரயிலில் கதவருகே நின்று பயணித்த கணவன், தவறி விழுந்த நிலையில், கணவனைக் காப்பாற்ற சற்றும் தாமதிக்காமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்த மனைவி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பதி – ராமேஸ்வரம் விரைவு ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்த தம்பதியர், வேலூர் மாவட்டம், காட்பாடி மற்றும் அரக்கோணம் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது,

ரயிலின் கதவு அருகே நின்று கொண்டிருந்த கணவர், ரயில் ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

தன் கண் எதிரே ரயிலில் இருந்து கணவன் தவறி கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, ஒரு நொடி கூட யோசிக்காமல் தனது கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், வேகமாகச் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார்.

ரயிலில் இருந்த மற்ற பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

தண்டவாளப் பகுதியில் தேடியபோது பலத்த வேகத்தில் ரயிலில் இருந்து குதித்ததில், அந்தப் பெண் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தண்டவாளத்தில் விழுந்த கணவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குத் துடித்த நிலையில் மீட்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்த கணவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம் இது குறித்து மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓடும் ரயிலில் கதவு அருகே அமர்ந்தோ அல்லது நின்றோ பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக வளைவுகளில் ரயில் திரும்பும்போது கதவு அருகே இருப்பவர்கள் நிலைதடுமாற வாய்ப்புள்ளது என்பதால் கூடுதல் கவனம் தேவை.

கணவன் கண்ணெதிரே விழுந்ததைக் கண்டு, உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் குதித்த மனைவியின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.