
மாத்தளை மாவட்டத்தில் உள்ள களுங்கங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் இலங்கையின் முதலாவது குரங்கு தடுப்பு மற்றும் பராமரிப்பு மையத்தை (Monkey Detention Centre) நிர்மாணிப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் (DWC) இடத்தை அடையாளம் கண்டுள்ளது.
இந்த மையம் 150 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இதில் குரங்குகளுக்கான உணவு, நீர் மற்றும் போதிய பாதுகாப்பு வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படும். மேலும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பரிந்துரைக்கு இணங்க, மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
மாத்தளை நகருக்குள் புகுந்து பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்து வரும் குரங்கு கூட்டங்கள் பாதுகாப்பான முறையில் பிடிக்கப்பட்டு இந்த மையத்திற்கு மாற்றப்படும்.
இவை மீண்டும் காடுகளுக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்க பலமான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளன.
குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக, பெண் குரங்குகளின் கருப்பையில் சிறிய அளவிலான கருத்தடை வளையங்களை (Contraceptive Loops) பொருத்தும் நவீன மருத்துவ முறை பயன்படுத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு தடுப்பு மையம் வீதம், நாடு முழுவதும் 9 மையங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி சமத் லக்ஷ்மன் பெரேரா தெரிவித்துள்ளார்.





