
ஒன்லைன் வர்த்தகம் மூலம் வருமானம் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி பெண்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக இலாபம் ஈட்டலாம் என கூறி, இந்த மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாடு ஒன்றின் மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் ஒன்லைன் வணிகம் மூலம் பணம் பெறலாம் என ஏமாற்றப்பட்டதாகவும், மோசடி செய்யப்பட்ட 3,141,967 ரூபாய் பணத்தில் 200,000 ரூபாய் சந்தேக நபரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. பின்னர் அந்தக் கணக்கு தெரியாத ஒருவருக்கு கைமாற்றப்பட்டுள்ளது.
மற்றொரு முறைப்பாட்டில் மோசடி செய்த 3,141,967 ரூபாய் பணத்தில் சந்தேக நபரின் பெயரில் உள்ள ஒரு கணக்கில் 233,522 ரூபாய் மோசடியாக வரவு வைக்கப்பட்டு, அந்தக் கணக்கு தெரியாத ஒருவருக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதற்கமைய, வடமேற்கு மாகாண குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இந்தப் பண மோசடி தொடர்பாக நேற்று காலியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் சந்தேக நபரையும், பாணந்துறையைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
வடமேற்கு மாகாண குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.





