
எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு : மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று (13.02.2026) அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் பாதஹேவாஹேட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.





