
அமெரிக்காவின் சீத்தெல் நகரில் போலீஸ் வாகனம் ஒன்று இரவு நேரத்தில் வேகமாக சென்றுக் கொண்டிருந்த போது, அந்த வழியே சென்றுக் கொண்டிருந்த இந்திய மாணவி மீது பயங்கர வேகத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இந்திய மாணவி ஜானவி கந்துலா பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவி உயிரிழந்த நிலையில், காவல் வாகனத்தை நிறுத்திவிட்டு, கீழிறங்கி வந்த போலீஸ் அதிகாரி, மாணவி உயிரிழந்ததைப் பார்த்ததும், சிரித்துக் கொண்டே கமெண்ட் செய்து விட்டு, வாகனத்தில் ஏறி சென்ற வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைக் குவித்தது.
அமெரிக்காவிலும் இந்த விஷயம் சர்ச்சையைக் கிளப்பி கடும் கண்டனங்களைக் குவித்த நிலையில், இந்த வழக்கில் உயிரிழந்த மாணவி ஜானவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் டாலர் (சுமார் ரூ.262 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஜானவி கந்துலா, Northeastern University-யின் சியாட்டில் வளாகத்தில் முதுநிலை தகவல் தொழில்நுட்பப் படிப்பு பயின்று வந்தார். 2023-ம் ஆண்டு சியாட்டில் நகரில் சாலை கடக்கும் போது, சைரன் ஒலி எழுப்பியபடி அவசரமாக சென்ற போலீஸ் வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய King County Superior Court, ஜானவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டியதாக கூறப்படும் அதிகாரி கெவின் டேவ் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 5,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குற்ற வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
மேலும், விபத்து நடந்தபோது இச்சம்பவத்துக்கு குறைந்த இழப்பீடு வழங்கலாம் என இழிவாக கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு போலீஸ் அதிகாரி டேனியல் ஆடரர் (Daniel Auderer) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது பணி நீக்கத்தை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.





