
கனடாவில் இளம்பெண்ணொருவர் தன் வீட்டில் பற்றிய தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணின் இழப்பைத் தாங்க இயலாமல் தவித்துவரும் நிலையில், அவரது கடைசி வார்த்தைகளை எண்ணி கண்ணீர் வடிக்கிறார்கள்.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Loyalist Township என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த பிரமிளா (Premila Neeil), சற்று முன்தான் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டிருந்தார்.
அவர் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அவரது மகளான லக்ஷாவிடமிருந்து (Lucksha Neeil, 19) மொபைல் அழைப்பு வரவே, காரை ஓரங்கட்டினார் பிரமிளா.

மொபைலில் அவர் கேட்ட விடயம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அவரது மகளான லக்ஷா, தங்கள் வீட்டில் தீப்பற்றி எரிவதாகவும், தான் வீட்டுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் பயத்துடன் கூறியுள்ளார்.
அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, அம்மா, வாருங்கள், என்னைக் காப்பாற்றுங்கள் என லக்ஷா கதற, எப்படியாவது கதவருகே வந்துவிடு என்று கூறியுள்ளார் பிரமிளா.
ஆனால், கதவையும் தீ சூழ்ந்துள்ளது. ஆகவே, அம்மா, கதவைத் திறக்கமுடியவில்லை, வெளியே வரமுடியவில்லை என்று கதறியுள்ளார் லக்ஷா.
அவ்வளவுதான், அதற்குப் பிறகு மொபைல் அமைதியாகிவிட, காதில் மொபைலை வைத்தபடியே வீட்டுக்கு காரை ஓட்டிவந்த பிரமிளாவால், வீடு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதை மட்டுமே காணமுடிந்துள்ளது.

அதுதான் தன் தங்கை பேசிய கடைசி வார்த்தைகள் என்கிறார் லக்ஷாவின் அண்ணனான கயா (Guyaa Neeil, 22).
ஜனவரி மாதம் 29ஆம் திகதி இந்த துயர சம்பவம் நிகழ்ந்த நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டும், என்ன நடந்தது, எப்படி வீட்டில் தீப்பற்றியது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
லக்ஷாவை இழந்த அவரது குடும்பத்தினர், அவரது கடைசி வார்த்தைகளை எண்ணி எண்ணி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.





