பாடசாலை வகுப்பறை கதவில் சிக்கி மாணவியின் 2 விரல்கள் துண்டிப்பு : குப்பையில் வீசி எறிந்த ஆசிரியர்கள்!!

17

பள்ளி வகுப்பறையில் இருந்த இரும்புக் கதவில் சிக்கி, 1ம் வகுப்பு மாணவியின் இரு விரல்கள் துண்டான நிலையில், துண்டான விரல்களைக் குப்பையில் ஆசிரியர்கள் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் துமகுரு தாலுகாவில் உள்ள கூலூர் கிராமத்தில் இந்த துயர, கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

1 ம் வகுப்பு மாணவி சின்மயி தேவி, பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது வகுப்பறையில் இருந்த கனமான இரும்புக் கதவில் மாணவி சின்மயியின் விரல்கள் சிக்கி இரண்டு விரல்கள் துண்டானது.

கடந்த பிப்ரவரி 11ம் தேதி இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்குப் பிறகு குழந்தைக்கு அதிகளவிலான இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல்,

துண்டிக்கப்பட்ட விரல்களையும் பாதுகாக்காமல், வகுப்பில் இருந்த ஆசிரியர்கள், துண்டான விரல்களைக் குப்பைத்தொட்டியில் எறிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மற்ற மாணவர்கள் இரத்தத்தை கண்டு பயப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆசிரியர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்று, வகுப்பறையில் இருந்த சிறுமியை மீட்டு, துமகுரு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

துண்டிக்கப்பட்ட விரல்கள் சரியாக பாதுகாக்கப்பட்டு உடனடியாக கொண்டு சென்றிருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் நாகேஷ், ஆசிரியர்கள் ரேணுகாம்மா, வெங்கடேஷ் மற்றும் தொகுதி கல்வி அதிகாரி ஹனுமந்தப்பா மீது கிராமப்புற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.