காதலர்கள் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சோகம்!!

19

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த உடல்கள், அந்தப் பகுதியில் நிலவும் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியின் நவீன்மண்டி பகுதியில் ஒரு கிடங்கிற்குள் இளைஞர் மற்றும் இளம்பெண்ணின் சடலங்கள் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

கொலையாளிகள் மிகவும் கொடூரமாகக் கற்களைக் கொண்டு இருவரின் முகம் மற்றும் தலைப்பகுதியை நசுக்கியுள்ளனர். இதனால் சடலங்களை முதற்கட்டமாக அடையாளம் காண்பதில் போலீசாருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

காவல்துறையின் தீவிர விசாரணைக்குப் பிறகு, உயிரிழந்தவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுபம் தம்தா(25) என்றும், லட்சுமி(19) என்பதும் தெரிய வந்தது.

இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் எதற்காகவும், யாரால் கொல்லப்பட்டார்கள் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.

சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் செல்போன் சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கொலையில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இது ஆணவக் கொலையா அல்லது முன்பகை காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள மண்டி பகுதியில் இத்தகைய கொடூரமான கொலை நடந்திருப்பது அப்பகுதி வியாபாரிகள் மற்றும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.