வவுனியாவில் தொடர் கொள்ளை : கணவன் – மனைவி உட்பட மூவர் கைது!!

520

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை இன்று(14.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த மூன்று தினங்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டிருந்தது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரத்தின வழிகாட்டலில், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இலங்கசிங்க தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, மடு, இரணைஇலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவரும், அவருடைய மனைவி (25 வயது), மற்றும் 31 வயதுடைய மனைவியின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரூபாய் மூன்று இலட்சம் பெறுமதியான திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர், சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.