நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் : பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!!

15

இலங்கையில் ஏழு மாவட்டங்களுக்கு கனமழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சற்று முன் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த எச்சரிக்கையானது நாளை (19.02.2026) மதியம் 01 மணி வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புக்களை குறைத்து கொள்ள இது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு : இலங்கைக்கு தென்கிழக்காக தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இத்தொகுதியின் நடத்தையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, எனவே கடலில் பயணம் செய்வோரும் கடற்தொழிலாளர் சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நாளுக்கான (18.02.2026) வானிலை அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு

அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

மேலும் இது தொடர்பில் நேற்று (17.02.2026) பிற்பகல் 3 மணியளவில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் இத்தொகுதியின் தாக்கம் காரணமாக கடல் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன்,

பலத்த காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், நேற்றைய தரவுகளின் அடிப்படையில் அடுத்த 168 மணித்தியாலங்களில் குறித்த தொகுதியானது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் இல்லை எனவும் தெரிவிக்ப்பட்டிருந்தது.