இளம் வங்கி ஊழியருக்கு நேர்ந்த சோகம் : மதிய உணவிற்காக சென்றபோது உயிரிழப்பு!!

15

பெங்களூருவில் மதிய உணவுக்காக வெளியே சென்ற வங்கி ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பெங்களூருவின் ராராஜி நகர் பகுதியில் யோகேஸ்வரி என்ற 27 வயது வங்கி ஊழியர் மதிய உணவிற்காக வெளியே சென்றிருந்த போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

யோகேஸ்வரி பரபரப்பான ராஜ்குமார் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். பெண்ணின் மீது மோதிய வேகத்தில் இருசக்கர வாகன ஓட்டியும் கீழே தள்ளப்பட்டார்.

கெம்பேகவுடா லே அவுட் பகுதிக்கு சேர்ந்த யோகேஸ்வரி, விபத்து நடைபெற்ற உடனே அருகில் உள்ள சுகுணா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். உடனடியாக யோகேஸ்வரி உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் 22 வயது தீபன் என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தின் போது வாகனம் எவ்வளவு வேகத்தில் வந்தது என்பது போன்ற விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.