
ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று வட்டவளை பகுதியில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இன்று (21) அதிகாலை 2:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
லொறியில் பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கிச் சென்ற லொறி, எதிர் திசையில் சென்ற லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி ஏற்படவிருந்த விபத்தைத் தவிர்க்க முயன்றபோது பிரதான வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த பயணியொருவர் விபத்தைப் பார்க்க சென்று மீண்டும் பேருந்தில் ஏற முயன்றபோது பயணி தவறி விழுந்து பேருந்தின் முன் சக்கரத்தின் கீழ் அவரது கால் சிக்கிக் கொண்டுள்ளது.
இதனால் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மீட்டு நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





