வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்புப் பாலம் : ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்!!

18

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் நுவரெலியா, லிந்துலை மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்கு செல்லும் பகுதியில் ஆக்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இரும்பு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், லிந்துலை – ஹென்போல்ட் தோட்டத்திற்கு கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மிளகுசேனை, ஊட்டுவெளி, சென்ட்ரல் கிளாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சிறியளவில் மழை பெய்தாலே ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து, மக்கள் அந்த வழியாகச் செல்ல முடியாத நிலை உருவாகிறது.

இவ்வாறான சூழ்நிலைகளில், அவர்கள் 5 கிலோ மீற்றர் தூரம் சுற்றுச் வீதியை பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கிராம மக்கள் முழுமையாக வெளியேற முடியாத அபாய நிலையும் உருவாகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இதன் தாக்கம் கல்வித்துறையிலும் கடுமையாக வெளிப்படுகிறது. லிந்துலை மெராயா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தினமும் ஆற்றைக் கடக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

மாணவர்கள் தமது பாதணிகளை கையில் எடுத்துக்கொண்டு ஆற்றை கடந்து, மறுபுறம் கால்களை சுத்தம் செய்து மீண்டும் பாதணிகளை அணிந்து பாடசாலைக்குச் செல்கின்ற காட்சிகள் பரவலாகக் காணப்படுகின்றன.

ஆசிரியர்கள், அரச மற்றும் தனியார் அலுவலக உத்தியோகத்தர்களும் இதே முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, சிறுவயது மாணவர்களை பெற்றோர் தோளில் தூக்கிச் சுமந்து, ஆற்றின் நடுவே கடந்து பாடசாலைக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை தொடர்கிறது. இதுதொடர்பாக கிராம மக்கள் தெரிவிக்கையில்,

“விவசாயமே எங்களின் வாழ்வாதாரம். உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளைப் பெற நுவரெலியா பிரதான நகரம் அல்லது மெராயா நகரத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது.

ஆனால், வெள்ளத்தில் சேதமடைந்த பாலம் இதுவரை புனரமைக்கப்படாததால், ஆற்றில் இறங்கி பெரும் சிரமங்களுக்கிடையே பயணம் செய்கிறோம்.

அத்தியாவசிய மற்றும் விவசாயப் பொருட்களை வாங்கிய பின்னர், அவற்றை தலைச்சுமையாக ஆற்றைக் கடந்து கொண்டு வருவது மிகுந்த சிரமமாக உள்ளது.

பல நேரங்களில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் சில பொருட்களை ஆற்றில் தவறவிடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

நீர்மட்டம் அதிகரிக்கும் நேரங்களில், முச்சக்கரவண்டி அல்லது இருசக்கர வாகனங்களில் 5 கிலோமீற்றர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்றனர்.

எனவே, உடனடியாக தற்காலிக பாலம் ஒன்றை அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தக் கோரிக்கை நீண்ட காலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.