வவுனியாவில் பல்பொருள் அங்காடிக்குள் கத்திக்குத்து : பெண் ஒருவர் கைது!!

75

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்து பெண் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரிகுளம், முனியப்பர் கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி வளவுக்குள் அமைந்துள்ள கடையில் இந்தக் கத்திக்குத்து சம்பவம் நேற்று (23.02) இடம்பெற்றிருந்தது.

சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்..

இந்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரரத்தின வழிகாட்டலில், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இலங்கசிங்க தலைமையில்,

பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்க (37348), ரேவத (40878) பொலிஸ் கொன்ஸ்தாபிள நவகீதன் (8098) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு துரிதமாகச் செயல்பட்டு கத்தித்குத்தை மேற்கொண்ட பெண்ணை உடனடியாக கைது செய்தனர்.

கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக துப்பரவு வேலை செய்து வந்ததாகவும்,

அங்கு வாடகை அடிப்படையில் தங்கியிருந்த 64 வயதுடைய பெண் ஒருவருக்கும் அங்கு துப்பரவு பணி வேலை செய்துவரும் குறித்த சந்தேகநபருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சந்தேகநபரை அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர் வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார்.

இந்த முரண்பாடு காரணமாகவே வேலையால் நிறுத்தப்பட்ட பெண்ணால் குறித்த கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்கான பெண் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின் கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.