சூடுபிடிக்கும் கள நிலவரம் : முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் – ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்!!

553

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுக்கு (Masoud Pezeshkian) எவ்வித உயிராபத்துக்களுமில்லையெனவும், அவர் பாதுகாப்பாகவுள்ளார் எனவும் ஈரானிய ஊடகங்கள் வழியாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெஹ்ரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் அரசியல் மையங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில், ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்கள், உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உள்ளடங்குகின்றன.

இவ்வாறான சூழலிலேயே ஈரான் ஜனாதிபதி பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

வடக்கு இஸ்ரேலில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்தவும், தாக்கவும் செயல்படுவதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது.