அடித்து உடைக்கப்பட்ட ஆசிரியையின் வீடு : பெண்ணை கைது செய்யக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம்!!

624

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் ஐந்தாம் பிரிவில் ஆசிரியரின் குடியிருப்பை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்யக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் நேற்று (03.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆசிரியர் வேலைக்குச் சென்றிருந்த போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கூலி தொழிலாளர்களை வைத்து வீடு உடைக்கப்பட்டதாகவும், அதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது பொலிஸார் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் ஆசிரியர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், குறித்த பெண் ஆசிரியருக்கு தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாகவும், சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தபோதும் அவர்களால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ஆசிரியர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பேர் செலசு, அலவாங்கு, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் வந்து வீட்டுக்குள் நுழைய முயன்றதாகவும்,

யாரும் இல்லாத வீட்டுக்குள் செல்ல வேண்டாம் என தாம் தெரிவித்தபோதும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் செலசு கொண்டு ஆசிரியரின் வீட்டை அடித்து உடைத்ததாகவும் தெரிவித்தார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் பின்னரே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்ததாகவும், அவர்கள் ஆசிரியரால் அழைக்கப்பட்டிருப்பார்கள் என நினைத்திருந்தபோதிலும், நிலைமையை பார்த்துவிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து சென்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதுவாயினும், யாரும் இல்லாத வீட்டில் சட்டத்தை கையில் எடுத்துச் செயல்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்தபோது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இடத்திற்கு அக்கரபத்தினை பிரதேச சபையின் தலைவி எஸ். ரதிதேவி, தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பிரேமதாஸ் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதி ஒகஸ்டீயன் ஆகியோர் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதுடன், வீட்டை சேதப்படுத்திய நபர்களை கைது செய்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.