யாழில் விபத்திற்கு உள்ளான படகு : இருவர் பலி : 11 பேர் வைத்தியசாலையில்!!

211

புதிய இணைப்பு : யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவு திருவிழாவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் அப்பகுதி மக்கள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். யாழில் பக்தர்களுடன் புறப்பட்ட படகு விபத்திற்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது்.

குருநகர் பகுதியை சேர்ந்த எம்.ஜோசப் (வயது 80) மற்றும் பிரான்ஸிஸ் (வயது 57) ஆகியோரின் சடலமே யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 13 வயது சிறுவன், 4 பெண்கள் 8 ஆண்கள் என 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் பக்தர்களுடன் புறப்பட்ட படகு ஒன்று சென்ற சிறிது நிமிடத்திலேயே தலை கீழாக கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகானது நாளையதினம்(07.03.2026) இடம்பெறவுள்ள பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்காக புறப்பட்டுச் சென்றவேளை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கும் பணியில்

இந்த விபத்தில் மூவர் கரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவர்களை மீட்கும் பணியில் கடற்றொழிலாளர்கள், படகோட்டிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.