வவுனியா பண்டாரிக்குளம் வீதியில் அனுமதியற்ற வாகன திருத்துமிடம் : மாநகரசபை நடவடிக்கை!!

443

வவுனியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட பண்டாரிகுளம் அம்மன் கோவில் வீதியில் அனுமதியற்ற வகையில் நடாத்தப்பட்டுவந்த வாகன திருத்துமிடத்தினை அகற்றுவதற்கான இறுதி அறிவித்தல் வவுனியா மாநகரசபையினால் வழங்கப்பட்டுள்ளது.

மாநகரசபை அதிகார எல்லைக்குள் பொது வீதிகளுக்கு சேதங்களை ஏற்படுத்துதல் மற்றும் அவ்வீதிகளில் போக்குவரத்துக்குத் தடைகளை ஏற்படுத்துவதைத் தவிர்த்தல், முறைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல்,

கண்காணிப்புச் செய்தல் மற்றும் நிர்வகித்தல் மாநகரசபைகள் கட்டளைச் சட்டத்தின் 267 (1) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 272(6) (ஆ) (இ) உப பிரிவின் கீழ் மாநகரசபைக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம்,

பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவித்தல் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்துதல் போன்றவை தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பண்டாரிகுளம் அம்மன் கோவில் வீதியில் அனுமதியற்ற வகையில் நடாத்தப்பட்டுவந்த வாகன திருத்துமிடத்தினை அகற்றுவதற்கான இறுதி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் மக்களின் பொதுப்போக்குவரத்து மற்றும் பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலினை விளைவிக்கும் வகையில் செயற்படும் அனைத்து வியாபாரங்கள் தொடர்பிலும் மாநகர சபையினால் தொடர் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் குறித்த வியாபாரங்களுக்கு எதிராக மாநகர சபை கட்டளை சட்டத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.