கழுத்தில் நகக்கீறல் பிரேத பரிசோதனையில் திடீர் திருப்பம் : சிக்கிய டரியால் கணவனே கொன்றது அம்பலம்!!

14

பெங்களூரு ஹென்னூர் பகுதியில் 27 வயது இளம்பெண் சுப்ரிதா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது கொலை வழக்காக உருவெடுத்துள்ளது. தலைமறைவாக உள்ள கணவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் ஷிட்லகட்டா பகுதியைச் சேர்ந்த சுப்ரிதாவிற்கும் (27), பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கிரண் குமார் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வரதட்சணை கொடுமை தலைதூக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை சுப்ரிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

சுப்ரிதா தூக்கில் தொங்குவதாகச் சொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தது. “என் மகள் தூக்கில் தொங்கவில்லை.

அவர் விஷம் கொடுத்து அல்லது பலமான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்” எனச் சுப்ரிதாவின் பெற்றோர் கதறியபடியே இது குறித்து புகார் தெரிவித்தனர்.

சுப்ரிதாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், உண்மையை மறைக்கத் தற்கொலை நாடகம் ஆடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து சுப்ரிதாவின் கணவர் கிரண் குமார் மாயமாகியுள்ளார். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் இல்லாதது போலீசாருக்கு அவர் மீதுள்ள சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

புதிய வாகனம் வாங்குவதற்காகத் தனது பெற்றோரிடம் பணம் கேட்டு வருமாறு சுப்ரிதாவை கிரண் குமார் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுப்ரிதா கடுமையாகத் துன்புறுத்தப்பட்டதாக அவரது உறவினர்கள் ஹென்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில், தற்போது பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தப்பியோடிய கணவர் கிரண் குமாரை பிடிப்பதற்காகப் போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

பி.ஆர்.அம்பேத்கர் மருத்துவமனையில் இன்று நடத்தப்பட்ட முதற்கட்ட உடற்கூறு ஆய்வில், சுப்ரிதாவின் கழுத்தில் நகக்கீறல்கள் மற்றும் பலமான காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தற்கொலை அல்ல, ‘மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு’ என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

தலைமறைவாக உள்ள கிரண் குமாரின் செல்போன் சிக்னல் கடைசியாகத் தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் பகுதியில் காட்டியுள்ளது. அங்கிருந்து அவர் கேரளா அல்லது ஆந்திராவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர்.

சுப்ரிதாவின் அறையில் இருந்து அவரது கைப்பட எழுதிய டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், “என்னால் இனி இந்தத் துன்பத்தைப் பொறுக்க முடியாது.

வண்டி வாங்க என் அப்பாவிடம் பணம் கேட்கச் சொல்லி தினமும் என்னை அடிக்கிறார்கள்” என உருக்கமாக எழுதியுள்ளது தெரியவந்துள்ளது.

வரதட்சணை கொடுமை மற்றும் கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கிரண் குமாரின் பெற்றோர் (சுப்ரிதாவின் மாமனார், மாமியார்) இன்று மாலை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுப்ரிதாவிற்கு நியாயம் கேட்டு ஹென்னூர் காவல் நிலையத்தை இன்று மதியம் அவரது உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.