
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் வறுமை நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2019 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் பண வறுமை (Monetary Poverty) மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
நாட்டின் 18 சதவீத மக்கள் பண வறுமையிலும், 25 சதவீதத்தினர் அடிப்படை வசதிகள் அற்ற பல பரிமாண வறுமையிலும் (Multidimensional Poverty) வாடுகின்றனர்.

சுமார் 33 சதவீத குடும்பங்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக ‘டிட்வா’ (Cyclone Ditwah) சூறாவளித் தாக்குதலுக்குப் பிறகு இந்தப் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.
40 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கடனில் மூழ்கியுள்ளன. இதில் பெரும்பாலானோர் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நீர் பாதுகாப்பின்மை (Water Insecurity) ஊவா மாகாணத்தில் மிக அதிகமாக (24%) பதிவாகியுள்ளது.
இது வடக்கு மாகாணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். வசதி குறைந்த குடும்பங்களே இத்தகைய நீர் தட்டுப்பாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாக சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம் (IWMI) சுட்டிக்காட்டியுள்ளது.
சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 2 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு, வாழ்வாதாரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சிதைந்துள்ளன.





