
நடிகர் பிரபுதேவா இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, இந்தியில் அஜய் தேவ்கானை வைத்து ஆக்சன் ஜாக்சன் படம் இயக்குகிறேன். அடுத்த ஆண்டு துவக்கத்தில் அக்ஷய்குமாரை வைத்து படம் எடுக்கிறேன். ஏ.பி.சி.டி. பார்ட்–2 என்ற இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. நல்ல கதை அமைந்தால் நடிப்பேன்.
தமிழ்ப்பட உலகை ஒருபோதும் மறக்க மாட்டேன். பட நிறுவனம் தொடங்கி தமிழில் படம் எடுப்பதற்கும் எண்ணம் உள்ளது. இந்தியில் நான் 25 கோடி வரை சம்பளம் வாங்குகிறேன் என்று சொல்வதில் உண்மை இல்லை. அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக நான் இல்லை. என்னை விட அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
தமிழ் படங்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. இங்குள்ள கதாநாயகர்களும் கொடிகட்டி பறக்கிறார்கள். இந்தி இயக்குனர்கள் தமிழ்ப் படங்களை ஆர்வமாக கவனிக்கின்றனர். விருது படங்களை இயக்கும் எண்ணம் இல்லை.
கமர்ஷியல் படம் எடுக்கவே விரும்புகிறேன். தமிழ் நடிகர்களில் விஜய் சிறப்பாக நடனம் ஆடக் கூடியவர். நேரம் கிடைத்தால் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றுவேன். மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. தனியாக வாழ்வது எனக்கு சந்தோஷம்தான் என்று பிரபுதேவா கூறினார்.





