இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு அதிர்ச்சி : எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் நீக்கம்!!

11

சமூக வலைதள துறையில் முன்னணி நிறுவனமான மெட்டா, தனது புகைப்படப் பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம்-இல் முக்கியமான தொழில்நுட்ப மாற்றமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’ வசதி இன்ஸ்டாகிராம் மெசேஜிங் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து விளக்கம் அளித்துள்ள மெட்டா நிறுவனம், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், சட்டவிரோத செயல்பாடுகளை கண்காணிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி அமலில் இருந்தபோது, செய்திகளை அனுப்புபவர் மற்றும் பெறுபவரைத் தவிர வேறு யாராலும் அவற்றை அணுக முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதால், தேவையான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக பயனர்களின் மெசேஜ்களை கண்காணிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதனால் சாதாரண பயனர்களின் தினசரி உரையாடல்கள் உடனடியாக பாதிக்கப்படாது எனினும், தனியுரிமை (Privacy) குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், மிகவும் ரகசியமான தகவல்களைப் பகிர வேண்டிய பயனர்கள், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி கொண்ட WhatsApp அல்லது Signal போன்ற செயலிகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என தொழில்நுட்ப நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களின் அழுத்தத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.