எரிபொருள் QR குறியீடு பதிவில் தொடரும் சிக்கல் : போலி இணையத்தளங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

15

புதிய இணைப்பு : எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளங்கள் மூலம் மக்களின் தரவுகள் திருடப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகன உரிமையாளர்கள் மாறிய தரவுகளை நாம் முறைமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், , வாகனம் கைவசம் இருந்தும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கம் கைவசம் இல்லாத சுமார் 12 இலட்சம் தரவுகள் நீக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை சுமார் 55 இலட்சம் பேர் QR குறியீட்டைப் பெற்றுள்ளனர். வாகனத்தை வைத்திருந்தும், பதிவு செய்த தொலைபேசி இலக்கம் இல்லாத உண்மையான உரிமையாளர்கள், நேற்று (18) இரவு முதல் தற்போது வைத்துள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உள்நுழைந்து வாகனத் தரவுகளை உள்ளிட முடியும்.

இதேவேளை, மற்றுமொருவரின் QR குறியீட்டை இரத்து செய்துவிட்டு அதனைத் தவறாகப் பயன்படுத்தினால், கணினி குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

தற்போது மக்களின் தரவுகளையும் வாகனங்களின் செஸி (Chassis) இலக்கங்களையும் சேகரிப்பதற்காக ஐந்து அல்லது ஆறு போலி இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் அவதானித்துள்ளோம்.

எனவே, இவ்வாறான இடங்களில் உங்களின் தரவுகளை வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகள் ஊடாகச் செல்லாமல், நீங்கள் நுழையும் இணையப் பக்கம் சரியானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என எச்சரித்துள்ளார்.

முதலாம் இணைப்பு : வாகன எரிபொருள் QR குறியீடு பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க இன்று (19) முதல் கணினியில் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாகன எரிபொருள் QR குறியீடுகளுக்காக (மார்ச் 14, 2026-க்கு முன்னர்) பதிவு செய்யப்பட்ட ஒரு வாகனத்தின் QR குறியீட்டைப் பெறுவதில்,

பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட கைபேசி எண் பயன்பாட்டில் இல்லாமை அல்லது வேறு ஒருவருக்குச் சொந்தமானதாக இருப்பதாலோ பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் தீர்ப்பதற்காக புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எரிபொருள் QR குறியீட்டை பெறுவதற்கான வாய்ப்பு

இந்த புதிய முறையின் மூலம், அந்த தடைகள் நீக்கப்பட்டு, எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு எளிதாக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  உங்கள் வாகனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்க, வாகன எண் மற்றும் சேசிஸ் எண்ணைச் சரியாக உள்ளிட்டால் மட்டுமே இந்த புதிய வசதியைப் பயன்படுத்த முடியும்.

வாகனம் ஏற்கனவே வேறு எண்ணின் கீழ் வாகன எரிபொருள் QR குறியீடுகளுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் (பதிவு மார்ச் 14, 2026-க்கு முன்னர் செய்யப்பட்டிருக்க வேண்டும்),

உங்களிடம் உள்ள சரியான தகவல்களை உள்ளிட்டு, தற்போதுள்ள பதிவை இரத்து செய்துவிட்டு உங்கள் புதிய கைபேசி எண்ணின் கீழ் மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம்.

வாகனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமை

நீங்கள் (Override) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அந்த வாகனத்துடன் தொடர்புடைய பழைய கணக்கு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்பட்டு, உங்கள் தகவல்களுடன் ஒரு புதிய கணக்கு உடனடியாகச் செயல்படுத்தப்படும்.

இந்தச் செயல்பாட்டில், வாகன எரிபொருள் QR குறியீடுகளுக்கான தற்போதைய பதிவு இரத்து செய்யப்படுவதால், முந்தைய பயனர் அந்த வாகனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளையும் அணுகலையும் இழப்பார்.

இந்த வசதியானது, நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத அல்லது பிற தரப்பினருக்குச் சொந்தமில்லாத தொலைபேசி எண்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு,

அதன் உண்மையான உரிமையாளர் எந்தத் தடையுமின்றித் தங்கள் QR குறியீட்டைப் பெற உதவும்.

எச்சரிக்கை: வாகன எரிபொருள் QR குறியீடுகளுக்காகப் பதிவுசெய்யப்பட்ட ஒரு வாகனத்தின் தரவை, அவ்வாறு செய்வதற்குச் சட்டப்பூர்வ உரிமை இல்லாமல் மற்றொரு நபர் நீக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.