
நாட்டிற்குத் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவிவரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, உலகச் சந்தையில் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களின் விலை உயர்வு, நாட்டின் எரிசக்தித் துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண காலங்களை விட செலவுகள் அதிகரித்துள்ளதால், எதிர்கால மின்சாரக் கட்டணங்கள் மற்றும் மசகு எண்ணெய் விலைகளை நிர்ணயிக்கும் போது, அரசாங்கம் இந்தச் சந்தை மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது.
மேலும், நிலக்கரியின் தரம் குறித்த தற்போதைய அறிக்கைகளை ஆய்வு செய்வதன் மூலம், திறமையான எரிசக்தி மேலாண்மையைப் பேணுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
நுகர்வு முறைகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து, பொதுமக்களுக்குத் தடையின்றி சேவைகளை வழங்குவதற்குத் தேவையான முடிவுகளை எடுக்க அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
மேலும் தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதே எங்களது பிரதான குறிக்கோள். அதற்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
ஒவ்வொரு மாதமும் மின்சாரப் பயன்பாட்டில் மாறுபாடுகள் உள்ளன. சில மாதங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது.
நிலக்கரியின் தரம் குறித்த சில அறிக்கைகள் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை நாங்கள் ஆராய்வோம். இருப்பினும், தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதே எங்களது நம்பிக்கையாகும்.
உலகச் சந்தையில் நிலக்கரி முதல் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
மறுபுறம், இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நாங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் சாதாரண காலங்களில் வரும் விலைகளை, அதாவது எண்ணெய் விலை அல்லது மின்சாரக் கட்டணத்தைக் கருத்தில் கொள்ளாமல், இதையே கருத்தில் கொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





