எரிபொருள் நெருக்கடி : அடுத்த ஒரு வாரத்திற்குள் இலங்கையில் முடங்கவுள்ள முக்கிய துறை : விடுக்கப்பட்டது எச்சரிக்கை!!

42

எரிபொருள் நெருக்கடியால் நாட்டின் வைத்தியசாலைக் கட்டமைப்பு அடுத்த ஒரு வாரத்திற்குள் முடங்கும் அல்லது பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதார சேவை பணியாளர்கள் கடமைக்குத் திரும்புவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பில், ஏனைய அரச துறை ஊழியர்களைப் போலன்றி, வைத்தியர்களுக்கு உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகளோ அல்லது எரிபொருள் கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதில்லை. இதனால், அவசர அழைப்புகள் மற்றும் மேலதிக நேரக் கடமைகளுக்காகத் தங்களது சொந்தச் செலவிலேயே அவர்கள் பயணிக்க வேண்டியுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் பங்கீடு, கடமைக்குச் செல்வதற்கு போதுமானதாக இல்லை. எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பதால் நோயாளர் பராமரிப்புக்கான பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு முன்னரே இந்தப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டும், அத்தியாவசிய சேவையாகக் கருதப்படும் சுகாதாரத் துறைக்கு இதுவரை முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை.

எரிபொருள் மற்றும் போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் நடைமுறைச் சாத்தியமான தீர்வை வழங்க வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால், வரும் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலைச் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், சுகாதார சேவைகளின் தொடர்ச்சி குறித்த மேலதிக முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-