இலங்கைக்கு வரும் எண்ணெய்க் கப்பல்கள் : ஈரான் கொடுத்த வாய்ப்பை ஏற்கமுடியாத நிலையில் அரசாங்கம்!!

377

ரஷ்யாவிலிருந்து எரிபொருளைப் பெறுவதற்கான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் இராஜதந்திர மட்டத்தில் உள்ளன, ஆனால் கடந்த காலத்தில் எங்களால் ரஷ்யாவிலிருந்து எரிபொருள் பெற முடியவில்லை. நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் இதைச் செய்ய முடியுமா என்று நாங்கள் பார்க்க முயற்சிக்கிறோம்.

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கைக்கு வருகை தர உள்ளார். அப்போது இந்தப் பேச்சுவார்த்தைகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது.

இலங்கைக்கு எரிபொருள் வழங்குவது குறித்து இலங்கைக்கான ஈரான் தூதுவர் தெரிவித்த கருத்தை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.

ஈரானிலிருந்து எரிபொருள் பெறுவதைப் பொறுத்தவரை, தற்போது கப்பல்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் உள்ளது. ஆனால் எங்களுக்கு அந்தத் திறன் இல்லை. ஆனாலும், ஈரானின் அந்த நட்புக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.

நாங்கள் இப்போது கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு பல விலை மனுக்களை வழங்கியுள்ளோம். விலை மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. எனவே, அதனூடாக நாங்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வோம் என்று நம்புகின்றோம்.

இந்த விலை மனுக்களின் அடிப்படையில், பல எரிபொருள் கப்பல்கள் ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்கு வந்து சேரும். இவற்றைக் கொண்டுதான் எரிபொருள் ஒதுக்கீட்டை தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.