மக்கள் வங்கி – இலங்கை வங்கி உள்ளிட்ட வங்கிகள் மூலம் 4 சதவீத வட்டியில் கடன் : அமைச்சர் அறிவிப்பு!!

231

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி 5 ஆண்டுகளில் 50,000 தொழில்முனைவோரை உருவாக்க நிதியுதவிகளையும், வழிகாட்டுதலையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த இலக்கை அடைவதற்கான ஒரு படியாக, சலுகைக் கடன் திட்டத்தைச் செயல்படுத்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவில் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாய மற்றும் தொழில்துறை துறைகளில் இளம் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான கடன் திட்டத்தைச் செயல்படுத்த அந்தப் பணத்தைப் பயன்படுத்த, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேற்கூறிய கடன் திட்டத்தை மேலும் செயல்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூலம் 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் மூலம் 4 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தில் கூறப்பட்ட கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும்,

அதற்கேற்ப வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கும் தமது அமைச்சரவையால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

மேலும், அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.