பகல் நேரங்களில் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டுகோள்!!

22

இலங்கையில் நிலவும் தற்போதைய மின் உற்பத்தி நெருக்கடியை கருத்திற்கொண்டு, பொதுமக்கள் தமது மின்சார தேவைகளைப் பகல் நேரங்களில் நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் மின் கட்டணத்தையும், நாட்டின் உற்பத்திச் செலவையும் குறைக்க முடியும் என்று இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையின் தலைவர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார இது குறித்து ஊடகங்களிடம் வெளியிட்ட முக்கிய தகவல்கள் பின்வருமாறு,

“தற்போது பகல் நேரங்களில் சூரிய சக்தி மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. எனவே, பொதுமக்கள் தங்களது மின்சாரம் சார்ந்த அத்தியாவசியப் பணிகளை முற்பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுப்பது மிகவும் பொருத்தமானது.

இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கான செலவு குறையும். நாட்டில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிகளவில் எரிபொருள்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

தற்போது மசகு எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால், மின் உற்பத்திக்காக விலையுயர்ந்த டீசல் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுகின்றது.

பொதுமக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு எரிசக்தி வினைத்திறன் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

குறிப்பாக மின்குமிழ்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏசி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் போது மின்சாரத்தைச் சேமிக்கும் தர அடையாளங்களைக் கொண்ட உபகரணங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

குறைந்த வினைத்திறன் கொண்ட மின் உபகரணங்கள் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கான புதிய சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட ரீதியில் மின் கட்டணத்தைக் குறைப்பதுடன், நாட்டின் அந்நியச் செலாவணியைச் செலவிட்டு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் பயன்பாட்டையும் குறைக்க முடியும்.

எனவே, பொதுமக்கள் தமது அன்றாட மின் தேவைகளுக்கான நேரத்தை மாற்றியமைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.