வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் முறைகேடு? சட்டநடவடிக்கை செல்லவுள்ளேன் : நடராசா ஜனகதீபன்!!

531

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (29.03.2026) இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்தி குழு கூட்ட தெரிவில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகவும் பாரிய மோசடிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க திட்டமிட்டு தெரிவுகள் நடத்தப்பட்டதாக முன்னாள் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் நடராசா ஜனகதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அபிவிருத்தி குழு பொதுக் கூட்டம் 29.03.2026 (ஞாயிற்று கிழமை) இடம்பெற்றபோது யாப்பிற்கும் இயற்கை நீதிக்கும் எதிரான வகையில் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.

பாடசாலை அதிபர் மற்றும் சில பழைய மாணவர்கள் இணைந்து பழைய மாணவ பெற்றோரே பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளராக வரவேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டு பிள்ளைகளின் பெற்றோராகிய என்னை செயலாளராக தெரிவு செய்த போது,

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை பிரதிநிதியாக கலந்து கொண்ட பிரதிக்கல்வி பணிப்பாளர் வீரசிங்க அவர்களும் அதிபர் யோகேஸ்வரன் அவர்களும் தொடர்ச்சியாகவோ இடைவிட்டோ இரண்டு முறை (நான்கு வருடங்கள்) பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினராக இருந்த ஒருவர் செயலாளராக தெரிவு செய்யப்பட முடியாது எனக் கூறி முற்றாக நிராகரித்ததுடன் தாம் திட்டமிட்டபடி பழைய மாணவ பெற்றோர் ஒருவரை நியமித்து என்னை அவமானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

பாடசாலை அபிவிருத்திக்குழு தொடர்பான சுற்று நிருபத்தில் அவ்வாறான எந்த குறிப்பும் யாப்பில் இல்லை என நான் உட்பட பல பெற்றோர்கள் வாதாடியும் அவர்கள் வேறொரு பந்தியை மேற்கோள் காட்டி பெற்றோர் தெரிவை நிராகரித்ததுடன் அதற்கு பின் தெரிவுசெய்யப்பட்ட இரண்டு பெற்றோர் பிரதிநிதிகளையும் நிராகரித்து தாம் முதல் நாளே ஏற்பாடு செய்த பழைய மாணவ பெற்றோரை செயலாளராக தெரிவுசெய்து பாரிய மோசடியையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் அரங்கேற்றியுள்ளனர்.

இந்த முறைகேடான நிகழ்வானது பாடசாலையின் பெற்றோர்களை உதாசீனப்படுத்தும் வகையில் அமைந்ததுடன் பழைய மாணவர்கள் தவிர்ந்த யாரும் பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளராக வரக்கூடாது எனும் எழுதப்படாத புதிய யாப்பு ஒன்றினை தமக்கு தாமே உருவாக்கி அதை தொடர்ச்சியாக நடைமுறைப் படுத்துவதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் இடம்பெறும் போது வருகை தந்திருந்த மிகவும் குறைவான பெற்றோரில் பலர் கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்கள் போகும் போது பழைய மாணவர்களே அனைத்தையும் தீர்மானிக்க வேண்டுமானால் பெற்றோராகிய எம்மை ஏன் கூட்டத்திற்கு அழைத்தீர்கள் என்று கூறியபடி வெளியேறி சென்றனர்.

ஏற்கனவே கடந்த பொதுக்கூட்டத்தின் போதும் பெற்றோர் சார்பில் செயலாளராக என்னை தெரிவு செய்தபோது அதற்கு போட்டியாக ஒரு பழைய மாணவ பெற்றோரை தெரிவுசெய்து என்னை வாபஸ் பெற வைத்தனர்.

ஏற்கனவே செயலாளராக பதவி வகித்தவர் மாதாந்த கூட்டறிக்கையை தயாரிக்காமல் பாடசாலை அதிபரின் மேற்பார்வையில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரால் தயாரிக்கப்பட்டு அல்லது எழுதப்பட்டு வருவதை கேள்விக்குட்படுத்தியமை , மாதாந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது ஆசிரிய பிரதிநிதிகள் தொடர்ச்சியாக சமூகமளிக்காமல் அவர்களிடம் ஒப்பம் மட்டும் பெற்றுக்கொண்டு பெரும்பான்மையை காட்டுவதை சுட்டிக் காட்டியமை ,

பழைய மாணவர் சங்கம் என்ற பெயரில் எந்தவித முறையான விதிகளை பின்பற்றாமல் பாடசாலை அபிவிருத்திக் குழுவிற்கு பொறுப்புக்கூறல் இன்றி பல மில்லியன் ரூபாயினை வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் சேகரித்து செலவு செய்தமையை கேள்வி கேட்டமை, பாடசாலையின் முழு அதிகாரத்தையும் அதிபர் பயன்படுத்தி பாடசாலை அபிவிருத்தி குழுவை தனது பிற்பாட்டு குழுவாக தான் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் தலையாட்டும் வகையில் பயன்படுத்தும் செயற்பாட்டை கேள்வுக்குட்படுத்தியமை,

இது போன்ற பல காரணங்களினால் என்னை போன்ற நியாயமான கேள்விகளை முன்வைப்பவர்கள் செயலாளராக வந்தால் தமது ஊழல் நடவடிக்கைகள் வெளிக்கொண்டுவரப்பட்டுவிடும் என்ற அச்சத்தினாலோ என்னவோ தொடர்ச்சியாக பாடசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்துக்குழு உறுப்பினர்களும் செயலாளரும் யார் யார் வர வேண்டும் என்பதனை தனக்கு இணைவாக தனது தான்தோன்றித் தனமான அனைத்து செயற்பாடுகளுக்கும் இணக்கம் காட்டும் ஒரு சில பழைய மாணவர்களை வைத்து பாடசாலை அபிவிருத்திக்குழு நிர்வாகத்தை தீர்மானிக்கின்றார்.

இந்த நிலை தொடருமானால் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையில் அனைத்து உரிமையும் அந்த பத்து (10) நபர்கள் கொண்ட பழைய மாணவர் குழுவிற்குத்தான் இருக்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என பாடசாலையில் இருந்து விலகியிருக்கும் சூழலை ஏற்படுத்தும்.

இவர்கள் முன்வைக்கும் சுற்றுநிரூபம் 54/2023 படி பார்த்தால் அதில் எங்கேயும் இரண்டு தடவைகள் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினராக இருக்கும் ஒருவர் செயலாளராக வர முடியாது என குறிப்பிடப்படவில்லை என்பதோடு ஒரு வாதத்திற்கு அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டால் 2024 -01-01 நடைமுறைக்கு வரும் ஒரு சுற்று நிருபத்தின் படி பார்த்தால் நான் குறித்து சுற்று நிருபம் நடைமுறைக்கு வந்து சரியாக ஒரு வருடமும் மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே உறுப்பினராக உள்ள நிலையில்,

நான் 2022 ற்கு முன்னரும் உறுப்பினராக இருந்த காலத்தை கணக்கிட்டு நிராகரித்தமை அதுவும் பொதுக்குழுவை மீறி அதிபரும் வலயக்கல்வி பிரதிநிதியும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினரும் நிராகரித்தமை அப்பட்டமான யாப்பு மற்றும் விதி மீறலாகும் இந்த செயற்பாட்டினால் சமூகத்தில் பலரின் நன்மதிப்பை பெற்ற நான் தனிப்பட்ட ரீதியில் பெரும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதுடன் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன்.

எனவே குறித்த யாப்பை சரியாக ஆராய்ந்து இந்த கூட்டத்தில் நடந்த ஜனநாயக மீறல் மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல் அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோருவதுடன் அன்றைய கூட்ட தீர்மானங்களும் தெரிவுகளும் முறையற்றது என அறிவித்து மீளவும் பொதுக்கூட்டத்தை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.