இலங்கையின் அதிரடி தீர்மானம் : 39 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா!!

32

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்களுக்கு 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு 2025 ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ், இலவச விசா வழங்குவதற்கான சட்ட வரைவுகள் சட்ட ஆலோசகரால் தயாரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன.

இந்த முன்மொழிவு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அமைச்சரவை அதற்கான அனுமதியை அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, இலங்கையை உலகின் முன்னணி சுற்றுலா இலக்குகளில் ஒன்றாக வலுப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்குள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஏடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற போது, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறித்த 39 நாடுகளின் விபரங்களை அறிவித்தார்.

அவுஸ்திரேலியா, ஒஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கசகஸ்தான், குவைத், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து,

நோர்வே, ஓமான், பாகிஸ்தான் ,போலந்து, கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெயின், சுவீடன், சுவிற்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா

இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், இலங்கையின் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.