கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் SMS தொடர்பில் எச்சரிக்கை!!

14

நாட்டில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணைய இணைப்புகள் (Links) குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப்பிரிவு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளில் உள்ள இணைய இணைப்புகளை (Links) கிளிக் செய்வதற்கு முன்னர், அதன் இறுதிப் பகுதியை (Domain) நன்கு அவதானிக்க வேண்டும்.

குறிப்பாக .NET, .XYZ மற்றும் .CC போன்ற வழமைக்கு மாறான முனைகளைக் கொண்ட இணைய இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான இணைய முகவரிகள் பெரும்பாலும் தனிநபர் தரவுகளைத் திருடுவதற்கும், வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை மோசடி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் இவ்வாறான செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (Links) எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.