
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகள் செல்வசுஹாசினி தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் வளர்க்கும் நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த நாயின் நகம் பட்டு மாணவிக்கு உடலில் சிறு கீறல் ஏற்பட்டுள்ளது.
நாய் கீறல் தானே என்று அலட்சியமாக இருந்த மாணவி அதற்குரிய முறையான மருத்துவ சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி மாணவிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் நாய் கீறியதன் மூலம் பரவிய விஷம் மாணவியின் உடல் முழுவதும் பரவி இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மாணவிக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த மாணவி செல்வசுஹாசினி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
வளர்ப்பு நாயின் நகம் பட்டதைச் சாதாரணமாக நினைத்து உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தாததால் 16 வயது மாணவியின் உயிர் பறிபோன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் துயர சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வளர்ப்பு விலங்குகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





