இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம் : போலி நாடகமாடிய தந்தை கைது!!

6

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சவுடேஸ்வரி (22), வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்துத் திருமணம் செய்ததற்காகத் அவரது தந்தையாலேயே ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சவுடேஸ்வரிக்கும், பக்கத்து வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நாகராஜ் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதற்குச் சவுடேஸ்வரியின் தந்தை சந்திர சீனு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மகளுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகளையும் செய்துள்ளார். ஆனால், திருமணத்திற்கு முன்பே சவுடேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி நாகராஜைத் திருமணம் செய்து கொண்டார்.

மகளைக் காணவில்லை என்றும், வீட்டில் இருந்த 25 பவுன் நகைகளை எடுத்துச் சென்றுவிட்டார் என்றும் சந்திர சீனு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் காதல் ஜோடியைக் கண்டுபிடித்துத் தேடி வந்தனர். காவல் நிலையத்தில் ஆஜரான சவுடேஸ்வரி, “தான் அணிந்திருந்த கம்மலைக் கூட கழற்றி வைத்து விட்டுத் தான் வந்தேன், நகைகளை எடுக்கவில்லை” எனத் தெளிவுபடுத்தினார்.

போலீசார் சவுடேஸ்வரியை 5 நாட்கள் தந்தையின் வீட்டில் தங்கிவிட்டு, அதன் பின் கணவர் வீட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தித் தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

கடந்த மாதம் 19-ம் தேதி சவுடேஸ்வரி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் இது தற்கொலை எனச் சொல்லப்பட்டாலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தலையணையால் அமுக்கிக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து போலீசார் சந்திர சீனுவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஏழை வாலிபரைக் காதலித்ததால் கௌரவம் கருதி மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இந்த ஆணவக் கொலைக்குக் காவல் அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சந்திர சீனுவை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த அந்த மர்மக் காவல் அதிகாரி யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.