
இலட்சியம் உறுதியாக இருந்தால் வறுமையும், தூரமும் ஒரு தடையல்ல என்பதை வவுனியா மண்ணைச் சேர்ந்த மாணவன் இராமகிருஷ்ணன் கோகுலன் மெய்ப்பித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் (Engineering Technology) வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் தோற்றிய கோகுலன், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை மட்டுமே பெற்றிருந்தார். எனினும், முதலிடத்தை அடைய வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், மனம் தளராமல் மீண்டும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றினார். அவரது அந்த அயராத உழைப்பிற்கு இன்று மாவட்ட மட்ட முதலிடம் பரிசாகக் கிடைத்துள்ளது.

கோகுலனின் இந்தச் சாதனைக்குப் பின்னால் ஒரு பெரும் போராட்டமே ஒளிந்துள்ளது. இவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. தனது அன்றாடக் கூலி வேலை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு, பல பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மகனின் கல்விக்காக அவர் பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளார். தந்தையின் கஷ்டத்தை உணர்ந்த கோகுலன், அதனைத் தனது வெற்றிக்கான எரிபொருளாக மாற்றிக் கொண்டார்.
வசதிகள் குறைவான கிராமப் பகுதியில் இருந்து வரும் கோகுலன், தனது கல்விக்காக தினமும் 8 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியிலேயே பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார். காலநிலையோ அல்லது உடல் சோர்வோ அவரது கல்விப் பயணத்தை ஒருபோதும் தடுத்ததில்லை.
“கடந்த முறை இரண்டாம் இடம் கிடைத்தபோது சிறு ஏமாற்றம் இருந்தது. ஆனால், அந்த ஏமாற்றத்தை வைராக்கியமாக மாற்றிப் படித்தேன். என் தந்தையின் உழைப்பு வீண்போகவில்லை என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி” என கோகுலன் தனது வெற்றிக் குறித்துத் தெரிவித்தார்.
வவுனியாவின் பல மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் இராமகிருஷ்ணன் கோகுலனுக்கு சமூக வலைத்தளங்களிலும், நேரிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
வறுமையைத் தனது விடாமுயற்சியால் வென்றெடுத்த இந்தச் சாதனையாளர், எதிர்காலத்தில் ஒரு சிறந்த பொறியியலாளராகி சமூகத்திற்குப் பங்காற்ற வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.





